பாலியல் ரீதியில் உங்களை யாராவது துன்புறுத்தினால் மாவட்ட நிர்வாகத்திற்கு வாட்ஸ்அப் எண்ணில் தெரியப்படுத்துங்கள் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பிளஸ் 2 படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலால் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் கரூரில் கல்லூரி மாணவி ஒருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவர் எதற்காக தூக்கிட்டு உயிரிழந்தார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மாவட்டத்திலுள்ள மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கருதும் பெண் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்வது மிகவும் மனவேதனை அளிக்கிறது. பாலியல் வன்முறை செய்யக்கூடிய நபரே இங்கு தவறிழைத்தவர்கள் மற்றும் தண்டனைக்குரியவர்கள். அவர்கள் சட்டப்படி குற்றவாளிகள் என்பதை நாம் அறிய வேண்டும்.
எனவே பாதிக்கப்பட்ட பெண்கள் எவ்விதத்திலும் தங்களுக்குள் குற்ற உணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் மீதோ அல்லது உங்கள் தோழிகள் மீதோ பாலியல் வன்முறை நிகழ்வதை நீங்கள் அறிந்தால் அச்சப்படுதல் மற்றும் மன வேதனை அடைந்து உங்களை நீங்களே தனிமைப்படுத்தி கொள்ளுதல் அல்லது தற்கொலை என்ற தவறான முடிவுக்கு போக வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் அனைவரும் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். உங்களுக்கு தேவை சரியான ஆலோசனை மற்றும் முதலுதவி மட்டுமே என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
உங்களுக்காக உருவாக்கப்பட்ட இலவச அவசர தொலைபேசி எண் 1098 என்ற child line எண்ணை தொடர்பு கொண்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பும் ஆலோசனையும் வழங்க நாங்கள் காத்திருக்கிறோம். நீங்கள் இந்த எண்ணுக்கு தகவல் கொடுக்கும் போது உங்கள் ரகசியங்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும். உங்களைப் பற்றிய விவரங்கள் யாரிடமும் பகிர படமாட்டாது. நீங்கள் எங்களோடு பேச விரும்பினால் 8903331098 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு hi என்ற குறுஞ்செய்தியை மட்டும் அனுப்பினால் போதும். நாங்கள் உங்களை தொடர்பு கொண்டு உங்கள் தேவையை அறிந்து கொள்வோம். உங்களுக்கு உதவி செய்ய அனைவரும் தயாராக இருக்கிறோம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.