சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் அருகே தாரமங்கலம் என்ற பகுதியில் செங்குந்தர் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு 6 முதல் 12ஆம் வகுப்பு வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்த நிலையில் மேட்டூர் அருகே உள்ள நால் ரோடு பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் விஜயக்குமார் அந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் அங்கு பயிலும் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு மாணவிகளுக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் இது குறித்து வெளியே யாரிடமாவது கூறினால் மதிப்பெண்ணை குறைத்து விடுவதாகவும் மாணவிகளை மிரட்டியுள்ளார். அவரின் இந்த மிரட்டலுக்கு பயப்படாத ஒரே ஒரு மாணவி மட்டும் தைரியமாக இது குறித்து பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அந்த மாணவியின் பெற்றோர் இது சம்பந்தமாக தட்டிக் கேட்பதற்கு உறவினர்களுடன் பள்ளிக்கு சென்றனர்.
இதனைத் தொடர்ந்து மற்ற மாணவிகள் பெற்றோர்களிடம் இது குறித்து கூறி,பல மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் என அனைவரும் அந்தப் பள்ளியை இன்று முற்றுகையிட்டனர். இந்த சம்பவத்தால் சேலம் மாவட்டமே அதிர்ந்து போனது. அதன் பிறகு இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் சங்கீதா,அனைத்து மகளிர் காவல் துறையினர் மற்றும் குழந்தைகள் மாவட்ட பாதுகாப்பு நலத்துறை அலுவலர்கள் ஆகியோர் மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் தலைமை ஆசிரியர் மீது மாணவிகள் அனைவரும் கூறிய புகாரை தொடர்ந்து தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.