தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 2022 – 2023 ஆம் கல்வியாண்டில் இருந்து எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றது. கொரோனா காலகட்டத்தில் 1,2 ஆம் வகுப்பு நேரடி வகுப்பு நடைபெறாமல் ‘ஆல்பாஸ்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் அடிப்படை கல்வியை மேம்படுத்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற தலைப்பில் நவீன முறை கற்பித்தல் பயிற்சி வழங்கப்படுகின்றது.
இதில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக மாவட்டந்தோறும் கருத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி வழங்கப்படுகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்ட அளவில் எண்ணும் எழுத்தும் கருத்தாளர் பயிற்சி வகுப்பை பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் பாஸ்கர சேதுபதி வியாழக்கிழமை ஆய்வு செய்துள்ளார். அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றியங்களைச் சேர்ந்த தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மயிலாடுதுறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தியாகி நாராயணசாமி, நகராட்சி மேல்நிலைப்பள்ளி கிட்டப்பா, நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்றது.
மேலும் மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தமிழ் எழுத்தாளர்களுக்கான பயிற்சி வகுப்பில் வட்டார கல்வி அலுவலர் ஜானகி, மாவட்ட ஆட்சியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன ஒருங்கிணைப்பாளர் ராணி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகையன் போன்ற முன்னிலையில் கருத்தாளர்கள் குமார், இளங்கோவன் போன்றோர் பயிற்சி அளித்தனர். இதேபோல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில கருத்தாளர் பயிற்சி வகுப்பில் ஆசிரியர் பயிற்சி முதல்வர் காமராஜ் மயிலாடுதுறை வட்டார கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வி போன்றோர் முன்னிலையில் கருத்தாளர் அபூர்வா, கார்த்திக் போன்றோர் பயிற்சி அளித்தனர். மேலும் இந்த பயிற்சி வகுப்பை பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் பாஸ்கர சேதுபதி, உதவி பேராசிரியர் பார்வையிட்டு கருத்தாளர்கள் அளிக்கப்படும் பயிற்சி பற்றி கேட்டறிந்து ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர். இதில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர், பயிற்சி நிறுவன ஒருங்கிணைப்பாளர் போன்றோர் பங்கேற்றனர்.