உக்ரைன் மீது ரஷ்யப் படைகளின் தாக்குதலானது கடந்த 9 நாட்களாக நீடித்து வந்த நிலையில், இன்று காலை 11:30 மணி அளவில் ரஷ்யா தற்காலிகமாக இந்த போரை நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் இந்திய மாணவர்கள் பலர் உக்ரைனில் உள்ள சுமியில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இதுபற்றி இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, சுமியிலுள்ள இந்திய மாணவர்களை குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் ,எங்கள் மாணவர்களுக்கான தகுந்த பாதுகாப்பை உருவாக்கி உடனடி போர் நிறுத்தத்திற்கு பல வழிகள் மூலம் ரஷ்யா மற்றும் உக்ரேனிய அரசுகளுக்கு கடுமையான அழுத்தம் கொடுத்து வந்துள்ளோம்.
இந்நிலையில் அங்குள்ள இந்திய மாணவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியே வரவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அம்மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், தேவையற்ற அபாயங்களைத் தவிர்க்கவும் எங்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என கூறியுள்ளார். இதனை அடுத்து வெளியுறவுத்துறை அமைச்சகமும், இந்திய தூதரகங்களும் மாணவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.