நீட் தேர்வு அச்சத்தால் மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்ட செய்தி கேட்டு வேதனை அடைந்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர் தனுஷ் மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப் போராட்டம் இப்போது தொடங்குகிறது. நாளை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேற்றப்பட உள்ளது.
மாணவச் செல்வங்கள் மனம் தளர வேண்டாம். சிறந்த எதிர்காலத்தை உங்களுக்கு அமைத்துத்தரும் பெரும்பொறுப்பும் கடமையும் அரசுக்குஉள்ளது. அந்தப் பொறுப்பினை உணர்ந்து, நீட் தேர்வை ஒன்றிய அரசு நீக்கும் வரை நமது சட்டரீதியான போராட்டம் தொடரும். அதனால் மாணவர்கள் யாரும் விபரீத முடிவு எடுக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் என முதல்வர் கூறியுள்ளார்.