தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவாரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழைநீர் தேங்கி வெள்ளம் போல காட்சி அளிக்கிறது. இதற்கிடையில் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கன மழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. கனமழையின் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் முடங்கியுள்ளனர். மேலும் சில இடங்களில் மழை நீரோடு கழிவுநீர் கலப்பதால் தொற்று நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது.
இத்தகைய சூழலில் கனமழை பெய்யும் மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியை ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ளவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.