ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற மார்ச் 18ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டி இந்து முன்னணி சார்பில் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் முதன்மை திருவிழாவாக கொண்டாடப்படுவது, பங்குனி உத்திர திருவிழாவாகும். இது ராமநாதபுரம் மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த மற்றும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வழிவிடு முருகன் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெறும். அவ்வாறு இந்த நடப்பு ஆண்டில் 82 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் வருகிற மார்ச் 18ஆம் தேதி அன்று ராமநாதபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக வந்து, தங்களது நேர்த்திக்கடனை வழிவிடு முருகன் ஆலயத்தில் செலுத்தி,அதன் பின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த விழாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்ய தமிழகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு இத்திருவிழாவிற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
அதன்படி திருநெல்வேலி மாவட்டத்திற்கு இந்த ஆண்டு, பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு அம்மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அளிப்பதாக தெரிவித்துள்ளார். எனவே அதைப்போல் இராமநாதபுரம் மாவட்டத்திலும் நடப்பாண்டில் இந்த பங்குனி உத்திர பெருவிழாவிற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி பொதுச் செயலாளர் ராமமூர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதையடுத்து அந்த அறிக்கையை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமானது வருகிற மார்ச் 18-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.