புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து இன்று பேசிய முதல்வர் ரங்கசாமி, “புதுவை மாநிலத்திற்கு கூடுதலாக 500 கோடி நிதியை பிரதமரிடம் கேட்டுள்ளோம். புதுச்சேரிக்கு மத்திய அரசு கூடுதல் நிதி தரும் என்று நம்பிக்கை இருக்கிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்த கூட்டத்தொடரில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்புவோம். அதுமட்டுமின்றி நேரில் சென்று மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்துவேன்.
புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தியாகிகள் ஓய்வூதியம் தற்போது 9 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்படும். கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பிற்படுத்தப்பட்டோர் கழகம் மூலம் பெற்ற கல்வி கடன் முற்றிலுமாக ரத்து செய்யப்படும். அரசு காலிப் பணியிடங்கள் விரைந்து நிரப்பப்படும். எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி முதற்கட்டமாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.