மாணவர்களின் மன உளைச்சலுக்கு திமுக அரசுதான் காரணம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளததாவது: “கடந்த வாரம் நீட் காரணமாக மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். நீட் தேர்வில் தோல்வியடைந்ததாலும், தேர்ச்சி பெற்றும் மருத்துவ மனைகளில் இடம் கிடைக்காத காரணத்தினாலும் பல மாணவர்கள் தொடர்ந்து தங்களின் உயிர்களை மாய்த்து வருகின்றனர். மருத்துவ படிப்பு மட்டுமே வாழ்க்கை கிடையாது. இதனால் நீட் நுழைவுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று விட்டோம் என்ற மன உளைச்சலில் மாணவர்கள் தங்கள் இன்னுயிரை இழக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அம்மா அரசு, அரசுப் பள்ளியில் பயின்ற ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் வகையில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அறிமுகம் செய்தது. திமுக அரசு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த போது வாய் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ? என்று உண்மையான சூழலை மாணவர்களிடம் தெரிவிக்காமல் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிவிட்டு மீண்டும் மீண்டும் நுழைவுத் தேர்வினை அரசியல் ஆக்கியதால் பல மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். இதனால் உண்மையை எடுத்துக் கூறி நுழைவுத்தேர்வை ரத்து செய்யும் வரை நீட் நுழைவுத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சியை உடனடியாக விடியா அரசு துவங்க வேண்டும். மேலும் அரசின் வாக்குறுதிகளை நம்பி உயிரிழந்த மாணவச் செல்வங்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று விடியா அரசை வலியுறுத்துகிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.