வகுப்பறையில் மின்விசிறி கழன்று சிறுவன் மீது விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கே.கே நகர் ராஜமன்னார் சாலை பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வத் கமல் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 8-ஆம் தேதி மாணவர்கள் வகுப்பறையில் இருந்துள்ளனர். அப்போது மின்விசிறி ஒன்று கழன்று அஸ்வத்கமலின் தலையில் விழுந்துவிட்டது. அப்போது சிறுவன் அம்மா என்று அலறியபடி கீழே விழுந்துவிட்டார். அதன் பிறகு சகஜ நிலைக்கு திரும்பிய சிறுவன் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று விட்டான்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் சிறுவனின் பெற்றோருக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சையும் அளிக்கவில்லை. இந்நிலையில் வீட்டிற்கு வந்த சிறுவன் தலை வலிப்பதாக கூறியுள்ளார். மேலும் வகுப்பறையில் மின்விசிறி கழன்று தலையில் விழுந்தது என சிறுவன் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுவனை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.
இதனை அடுத்து எங்களது மகனுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் அதற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு எனவும், இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சசிகுமார் கே.கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.