படிக்கட்டில் தொங்கிய மாணவனை அரசு பேருந்து ஓட்டுநர் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகில் தேத்தாம்பட்டியிலிருந்து திண்டுக்கலுக்கு நேற்று முன்தினம் அரசு டவுன் பேருந்து ஒன்று கிளம்பியது. அந்த பேருந்து நேற்று காலை 8 மணி அளவில் சாணார்பட்டி பேருந்து நிலையத்திற்கு வந்த போது, பள்ளி மாணவர்கள் சிலர் அந்த பேருந்தில் ஏறினார்கள். அதன்பின் பேருந்தில் ஏறிய மாணவர்கள் உள்ளே வராமல் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தார்கள்.
இதை பார்த்த ஓட்டுநர் மாணவர்களை பேருந்துக்குள் வருமாறு தெரிவித்தார். ஆனால் மாணவர்கள் தொடர்ந்து படிக்கட்டிலேயே தொங்கிக் கொண்டு, சில மாணவர்கள் தகாத வார்த்தைகளால் ஓட்டுநரை திட்டினார்கள். இதையடுத்து பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் கீழே இறங்கி அங்கு இருந்த கம்பை எடுத்து மாணவர்களை தாக்கினார். இதனால் ஒரு மாணவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபம் அடைந்த மாணவர்கள் பேருந்தை விட்டு இறங்கி அருகில் உள்ள சாணார்பட்டி காவல் நிலையத்திற்கு சென்று மாணவரை தாக்கிய ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
மேலும் பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணிக்கக்கூடாது என்று மாணவர்களுக்கும், இதேபோன்று மாணவர்களை தாக்கக்கூடாது என்று ஓட்டுனருக்கும் காவல்துறையினர் அறிவுறுத்தினார்கள். இதனை அடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.