இளம்பெண் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகிழ்மதி (25) என்ற மகள் இருந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஜாம்பஜாரில் தங்கி, நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ஒரு தனியார் பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மகிழ்மதியின் ஆண் நண்பர் ராஜ்குமார் அவருடைய வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். இதனையடுத்து மகிழ்மதி பயிற்சி மையத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது மகிழ்மதி வீட்டின் கதவை நீண்ட நேரமாக தட்ட ராஜ்குமார் கதவை திறக்காமல் இருந்துள்ளார். இதனையடுத்து மகிழ்மதி ராஜ்குமாரின் செல்போனுக்கு போன் செய்துள்ளார். ஆனால் ராஜ்குமார் போனை எடுக்காததால் பதறிப்போன மகிழ்மதி வீட்டின் பின்பக்க பால்கனிக்கு சென்று பார்க்கலாம் என நினைத்துள்ளார்.
இதனால் மகிழ்மதி தன்னுடைய இடுப்பில் ஒரு புடவையை கட்டிக் கொண்டு 3-வது மாடியில் இருந்து கீழே இறங்கியுள்ளார். அவர் இறங்கும் போது திடீரென புடவை அறுந்ததால் மகிழ்மதி கீழே தவறி விழுந்துவிட்டார். அதில் மகிழ்மதிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகிழ்மதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மகிழ்மதியின் ஆண் நண்பர் ராஜ் குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.