மாசு இல்லா தீபாவளிக்கான பிரசாரத்தை துவங்கும் அடிப்படையில், தில்லி அரசானது நேற்று கனாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் 51,000 தீபங்களை ஏற்றியது.
சென்ற 2 வருடங்களாக கடைபிடிக்கப்பட்டு வரும் அனைத்து வித பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு ஜனவரி 1ஆம் தேதி வரை முழுமையான தடையை தில்லி அரசு செப்டம்பா் மாதம் மீண்டும் விதித்தது. தில்லியில் தீபாவளி அன்று பட்டாசு வெடித்தால் 6 மாதம் வரை ஜெயில் தண்டனையும், 200 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால்ராய் கடந்த புதன்கிழமை அறிவித்து இருந்தாா்.
தேசியத் தலைநகரில் பட்டாசுகளை உற்பத்திசெய்தல், சேமித்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்றவற்றுக்கு வெடிபொருள் சட்டத்தின் 9பி பிரிவின் கீழ் ரூ.5,000 வரை அபராதம் மற்றும் 3 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் அவா் கூறினாா். தடையை நடைமுறைபடுத்த மொத்தம் 408 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தில்லி காவல்துறை உதவி ஆணையா்களின் கீழ் 210 குழுக்களையும், வருவாய்த்துறை 165 குழுக்களையும் அமைத்து இருக்கிறது. அத்துடன் தில்லி மாசுக்கட்டுப்பாட்டுக் குழு 33 குழுக்களை அமைத்து உள்ளது. குறைந்த வெப்பநிலை, காற்றின் வேகம் ஆகிய சாதகமற்ற வானிலை காரணிகளால் தில்லி மற்றும் அண்டை பகுதிகளிலுள்ள காற்றின் தரம் அக்டோபரில் மோசமடையத் துவங்குகிறது. அண்டை மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதால் வெளியேற்றப்படும் புகை, பயிா்க் கழிவுகள் எரிப்பு போன்றவை காற்றின் தரத்தை மேலும் மோசமாக்குகிறது.