மலைவாழ் மக்கள் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள பர்கூர் மலைப்பகுதியில் கல்வாரை மற்றும் நெல்லிக்காடு ஆகிய மலை கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 22 மலைவாழ் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றிலிருந்து தண்ணீர் வரவில்லை. இதனால் பயனற்று அந்த கிணறு அப்படியே இருக்கிறது. இந்நிலையில் மலைவாழ் மக்கள் வனப்பகுதியை ஒட்டி ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் வனக்குட்டைக்கு சென்று தினமும் குடங்களில் தண்ணீரை எடுத்து வருகின்றனர்.
அந்த நீர் கலங்கிய நிலையில் இருப்பதால் மலைவாழ் மக்களின் உடல்நலம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறும் போது, மாசு கலந்த நீரை குடிநீராக பயன்படுத்தி வருகிறோம். எங்கள் கிராமத்திலிருந்து வன குட்டைக்கு சென்று வர மொத்தம் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டியிருக்கிறது. இதனால் சரியான நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகிறோம். எனவே எங்கள் பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.