Categories
மாநில செய்திகள்

மழைக்காலத்தில் என்ன செய்ய வேண்டும்? செய்யக்கூடாது?

மழை நேரத்தில் தனியாக உள்ள மரங்கள், குடிசைகள், சேதமடைந்த கட்டடங்கள் மற்றும் கூடாரங்களுக்கு அடியில் தஞ்சம் அடைய கூடாது. நீர்நிலைகள், தண்ணீர் தேங்கிய பகுதிகளில் இருந்து விலகி இருப்பது அவசியம். குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளை தண்ணீருக்கு அருகில் விடக்கூடாது. மின்னல் அல்லது இடியின்போது, மின் சாதனங்கள் மற்றும் செல்போன், தொலைபேசிகளை பயன்படுத்த வேண்டாம். மழை நீர் தேங்கி உள்ள தெருக்களில் உள்ள மின்மாற்றி அருகே செல்ல வேண்டாம். திறந்திருக்கும் ஜன்னல்கள் அல்லது கதவுகளுக்கு அருகில் நிற்பதை தவிர்க்க வேண்டும்.

குளியலறைகள், கழிப்பறைகள் மற்றும் பிற ஈரமான இடங்களில் நேரடியாக கைகளை கொண்டு எலெக்ட்ரிக் ஸ்விட்ச்களை தொடக்கூடாது. ஈரமான துணிகளை உலர்த்த மின்கம்பங்களில் கயிறு கட்டவோ, மின்கம்பங்களில் கால்நடைகளை கட்டவோ கூடாது. அறுந்து கிடக்கும் மின்வயர்களுக்கு அருகில் செல்லக்கூடாது. தேவையற்ற வதந்திகளை பரப்ப கூடாது. மழைக்காலத்தின் போது குடை ,மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, டார்ச் லைட் மற்றும் பேட்டரிகளை தயாராக வைத்திருப்பது அவசியம்.

பலத்த மழை பெய்யும் பொழுது மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு இணைப்பினை துண்டித்து வைக்க வேண்டும். மின் கசிவு அல்லது தீவிபத்து ஏற்பட்டால் உடனடியாக மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். முதலுதவிப் பெட்டியை தயாராக வைத்திருப்பது அவசியம். கொதிக்க வைத்த நீரை அருந்தவேண்டும். விலை உயர்ந்த பொருட்கள் ஆவணங்கள் உணவுப் பொருட்களை நீர் புகாத பைகளில் பாதுகாத்து வைக்கவேண்டும். இதேபோல் அடையாள அட்டை, சான்றிதழ்கள், உள்ளிட்டவற்றையும் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களை தயார் நிலையில் வைத்துக் கொள்வது அவசியம். குப்பைகளை முறையாக அகற்றவேண்டும். செல்போன்களை முன்கூட்டியே சார்ஜ் செய்து வைத்துக்கொள்ளவேண்டும். புயல், சூறாவளியின் போது கதவுகள், ஜன்னல்களை மூடி வைக்கவேண்டும். அவசர உதவி எண்களை அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். மழை வெள்ள காலங்களில் அரசு வெளியிடும் முன்னெச்சரிக்கையை முறையாக பின்பற்ற வேண்டும்.

Categories

Tech |