டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூதாட்டி பலியான நிலையில், 11 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஒரு தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் களை எடுக்கும் பணிக்காக தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 11 பேர் டிராக்டரில் சென்றுள்ளனர். இவர்கள் பணி முடித்து விட்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டபோது டிராக்டர் மலையடிவாரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தேவிபட்டினம் கீழூர் ராமசாமியாபுரம் கிராமத்தை சேர்ந்த சுந்தரம்மாள்(65) என்பவர் டிராக்டருக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதனை அடுத்து படுகாயமடைந்த டிராக்டர் ஓட்டுநர் சுந்தரமூர்த்தி(34), மரிய பாக்கியம்(75), ராஜலட்சுமி(51), கோமதி(63) உள்பட 11 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுந்தரம்மாளின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.