குடும்ப கட்டுப்பாட்டை செயல்படுத்துவதில் சிறப்பான தலைமைத்துவத்திற்கான விருதை இந்தியா வென்றுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா குடும்ப கட்டுப்பாட்டை செயல்படுத்துவதில் சிறப்பான தலைமைத்துவத்திற்கான விருதை இந்தியா பெற்றுள்ளது என கூறியுள்ளார். இது தொடர்பாக மன்சுக் மாண்டவியா வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, தாய்லாந்தில் பட்டாயா நகரில் குடும்ப கட்டுப்பாடு தொடர்பான சர்வதேச மாநாடு (ஐசிஎஃப்பி) நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டில் 120-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 3,500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் நேரடியாகவும், 10,௦௦௦-ற்கும் மேற்பட்டவர்கள் காணொலி காட்சி வாயிலாகவும் பங்கேற்றுள்ளனர். குடும்ப கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் சிறப்பான தலைமைத்துவத்திற்கான விருதை பெற்ற ஒரே நாடாக இந்தியா விளங்குகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சரியான தகவல் மற்றும் நம்பகமான தேவைகளின் அடிப்படையில் தரமான குடும்ப கட்டுப்பாடு முறைகளை அணுகுவதற்காக கிடைத்த இந்த விருது அரசிற்கு கிடைத்த அங்கீகாரம். மேலும் நவீன குடும்ப கட்டுப்பாடு முறைகளை அமல்படுத்தும் இந்தியாவின் முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இந்த விருது கிடைத்திருப்பதாக அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். கடந்த 2015 – 2016 ஆம் வருடம் நாட்டில் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும் பெண்களின் விகிதம் 66 சதவீதமாக இருந்தது. 2019 – 2021 ஆண்டில் இது 76 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2030 ஆம் ஆண்டில் இந்த சதவீதமானது 75% ஆக இருக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்தியா இந்த வருடமே அந்த இலக்கை எட்டியுள்ளது.