மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கையை நேற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்கு மூலத்தில் இருப்பதாவது,
தமிழக அரசின் G.O.Ms, No.817 of 2017 மற்றும் G.O.Ms, No.829 of 2017 அரசாணையின் படியாக அமைக்கப்பட்ட ஆணையத்தின் சம்மனை (CW.NO.16/AAJCOI/2017 DATED: 21/12/2017) நான் 23/12/2017ம் தேதியன்று பரப்பன அக்ரஹார சிறைத்துறை அதிகாரிகளின் வாயிலாக பெற்றுக் கொண்டேன். அந்த வகையில் என் வழக்கறிஞருக்கு என் சார்பாக இந்த ஆணையத்தில் பங்கேற்க வக்காலத்து ஒன்று வாங்கினேன்.
அதன்படி என் சார்பாக 05/01/2018ம் தேதியன்று என் வழக்கறிஞர் மேற்படி வக்காலத்துடன் ஒரு அப்ளிகேஷன் மனுவினை (அப்ளிகேஷன் எண்.1/2018) தங்கள் ஆணையத்தின் முன் தாக்கல் செய்தார். எனினும் அதன் பிறகு ஆணையம் தொடர்ந்து பல புது சாட்சிகளை விசாரித்தும், பல சாட்சிகளின் விசாரணைக்கு கால நீட்டிப்பும் வழங்கி வந்தபடியால் 12/01/2018 ஆம் தேதியன்று என் வழக்கறிஞர் மெமோ ஒன்றையும் தாக்கல் செய்தார்.
அதன் மீது பல தேதிகளில் நடந்த தொடர் விசாரணையின்படி 30/01/2018 ஆம் தேதி அன்று இந்த ஆணையம் மேற்படி மனு (அப்ளிகேஷன் எண்.1/2018) மற்றும் மேற்படி மெமோவின் மீது உத்தரவு பிறப்பித்திருந்தது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் 30.01.2018 உத்தரவு பிறப்பித்த தேவி வரையில் இந்த ஆணையம் “விசாரணை ஆணையங்கள் சட்ட படியான’ 8B பிரிவு நோட்டிஸின் படி நான் பதில் கூறுவதற்கு, என்னை பற்றி குற்றம்சாட்டப்பட்ட எந்த ஆணைகளையும் மற்றும் எந்த ஒரு சாட்சியங்களையும் எனக்கு தரவில்லை என்பதாகும். இந்த சட்டத்தின் பார்வையிலும் இயற்கை நிதியின் அடிப்படையில் சரியானது அல்ல.