தீ விபத்து ஏற்பட்டதால் 10 மாடுகள் உடல் கருகி உயிரிழந்தது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பூ.உடையார் கிராமத்தில் ஜெயகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 10 பசு மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் மாட்டு கொட்டகை திடீரென தீப்பிடித்து அருகில் இருந்த வைக்கோல் கட்டுகளுக்கும் தீ வேகமாக பரவியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயகோபால் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
இதற்கிடையே கொட்டகை சரிந்து மாடுகள் மீது விழுந்தது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கொட்டகையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் தீயில் கருகி 10 மாடுகளும் பரிதாபமாக உயிரிழந்தன. மர்மமான முறையில் மாட்டு கொட்டகை தீப்பிடித்து பத்து மாடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.