கோவை செல்வபுரம் எல்ஐசி காலனி பகுதியை சேர்ந்த நாராயணன் அ.தி.மு.க-வின் இளைஞரணியில் இருக்கிறார். இவர் அதே பகுதியில் பேரூர் சாலை அருகில் மணி மருந்தகம் எனும் பெயரில் சென்ற 15 வருடங்களுக்கு மேல் மருந்து கடை நடத்தி வருகிறார். வாடகை கட்டிடத்தில் மருந்தகம் இயங்கி வந்த நிலையில், கடந்த 7 வருடங்களுக்கு முன்பு கட்டிட உரிமையாளரான தண்டபாணி, மாரியப்பன் என்பவருக்கு கட்டிடத்தை விற்பனை செய்தார். ஆனால் இது நாராயணனுக்கு பிடிக்கவில்லை.
ஏனெனில் தானே வாங்கிக்கொள்வதாக இருந்த நிலையில் விற்பனை செய்ததால் கட்டிடத்தை காலி செய்ய நாராயணன் மறுத்துள்ளார். அதன்பின் கட்டிட உரிமையாளர் மாரியப்பன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் படி வாடகை பணத்தை நாராயணன் நீதிமன்றம் வாயிலாக செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் மாரியப்பன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதற்கிடையில் இன்று அதிகாலை மருந்தகத்துக்கு வந்த இருபதுக்கும் அதிகமானோர் மருந்தகத்தை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை சூறையாடி ஆட்டோவில் ஏற்றி சென்று உள்ளனர். இது தொடர்பாக தகவலறிந்த நாராயணன் உடனே போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். அத்துடன் வியாபாரிகள் சங்கத்தினர் காவல்நிலையத்தில் திரண்டனர். அந்த பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மருந்தகத்தை சூறையாடியது கட்டிட உரிமையாளர் மாரியப்பனின் மருமகன் கௌதம் மற்றும் சிலர் என்பது தெரியவந்தது. இதுபற்றி காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.