அரசு மருத்துவமனை நுழைவாயிலில் உள்ள இரும்பு கம்பிகிடையே பெண்ணின் கால் சிக்கியதை அடுத்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் மீட்டார்கள்.
காரைக்காலைச் சேர்ந்த உஷாராணி என்பவர் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரை பார்ப்பதற்காக வந்தபொழுது மருத்துவமனையின் நுழைவாயிலில் இருக்கும் இரும்பு கம்பிகளுக்கு இடையே அவரின் கால் மாட்டிக்கொண்டது. அவர் எடுக்க முயற்சித்தும் அவரின் காலை எடுக்க முடியவில்லை.
இதையடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் எந்திரத்தின் உதவியுடன் உஷா ராணியின் காலை வெளியே எடுத்தார்கள். இதில் உஷாராணி காயம் அடைந்ததால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையின் நுழைவாயிலில் இருக்கும் இரும்பு கம்பிகளுக்கு இடையே அதிக இடைவெளி இருப்பதால் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.