மருத்துவமனையில் பிரியாணி விருந்து வைக்கப்பட்டது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. நேற்று முன்தினம் மருத்துவமனையில் பிரியாணி சமைக்கப்பட்டு மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு விருந்து வைக்கப்பட்டு அனைவரும் உணவு உண்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதனை பார்த்த சிலர் எதற்காக விருந்து வைக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் விருந்து வைத்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அலுவலர் பூமிநாதன் கூறியபோது, வேலை பார்க்கும் மருத்துவர்கள் உள்பட அனைவரும் வேலை காரணமாக மன உளைச்சலில் இறந்தனர். எனவே அவர்கள் இயல்பாக இருப்பதற்கு உணவு சமைத்து வழங்கப்பட்டுள்ளது. வேறு எந்த காரணத்திற்காகவும் உணவு வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.