மராட்டிய மாநிலம் அகமது நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலம் அகமது நகரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த அவசர சிகிச்சை பிரிவில் 20 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் அவர்கள் அனைவரும் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் எனவும் கூறப்படுகிறது. மேலும் 4 தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் மருத்துவமனையில் உள்ள மற்ற வார்டுகளுக்கு தீ பரவாமல் இருக்க தொடர் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று இன்னும் அறியப்படவில்லை. இதனை தொடர்ந்து உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் மருத்துவமனையை தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றனர்.