பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள லப்பைக்குடிகாட்டில் வீட்டின் ஜன்னல் கம்பிகளை அறுத்து பட்டப்பகலில் 35 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள லப்பைக்குடிகாடு ஜமாலியா நகரில் வசித்து வரும் அப்துல்லா துபாயில் வேலை பார்த்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் அப்துல்லா, அவரது மனைவி மற்றும் 3 மகன்களுடன் நேற்று முன்தினம் காலையில் வீட்டை பூட்டிவிட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக சென்றார். அதன்பின் லப்பைகுடிகாட்டிற்க்கு திருச்சியில் இருந்து இரவு 8 மணி அளவில் திரும்பிய அவர் வீட்டிற்கு உள்ளே சென்றார்.
அப்போது வீட்டின் பின்பக்க கதவில் உள்ள ஜன்னல்கள் அறுக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் பீரோவை சென்று ஆய்வு செய்து பார்த்த போது 35 பவுன் நகைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து மங்களமேடு காவல் நிலையத்தில் அப்துல்லா புகார் அளித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அங்கு கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.