பொதுவாக மனிதர்கள் தங்களுடைய உடல்நலத்தை பேணுவதில் எடுத்துக் கொள்ளும் அக்கறையை மனநலத்தை பேணுவதில் எடுத்துக் கொள்வதில்லை. இதன் காரணமாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பலருக்கு மனநல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதில் மாணவர்களை பொருத்தவரையில் கல்வி, வேலை வாய்ப்பு, எதிர்காலம் போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். இந்த சவால்களை பெரும்பாலான மாணவர்கள் எதிர் கொண்டாலும், சிலருக்கு அவர்கள் சந்திக்கும் சவால்கள் நெருக்கடியை கொடுத்து எதிர்மறையான எண்ணங்களை அவர்கள் மனதிற்குள் கொண்டு வருகிறது. இதனால் மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.
இதன் காரணமாக மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு மனம் என்ற பெயரில் மனநல நல்லாதரவு மன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் வைத்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்த மனநல நல்லாதரவும் மன்றங்களில் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், அனைத்து துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு மனநலனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த திட்டம் முதலில் மருத்துவ கல்லூரிகளில் தொடங்கப்பட்டு பின் படிப்படியாக மற்ற கல்லூரிகளுக்கும் தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.