மரியாதையுடன் வாழ ஆசைப்படும் எங்களை இந்த சமூகம் அவ்வாறு வாழ விடவில்லை என்று திருநங்கை ஒருவர் கண்ணீருடன் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்
கேரள மாநிலத்தில் இருக்கும் கொச்சியை சேர்ந்த சஜினா என்ற திருநங்கை பிரியாணி கடை ஒன்று வைத்து நடத்தி வருகின்றார். இவரது கடையில் நாலு திருநங்கைகளுக்கும் இரண்டு பெண்களுக்கும் வேலைவாய்ப்பும் கொடுத்துள்ளார். கொரோனா சூழலிலும் இவரது கடையில் பிரியாணி வாங்குவதற்கு கூட்டம் அலைமோதி உள்ளது. ஆனால் தற்போது ஆள் நடமாட்டமின்றி காணப்படுகின்றது. அதற்கு காரணம் அக்கம்பக்கத்தில் கடை வைத்திருப்பவர்கள் சஜினா மற்றும் கடையில் பணிபுரியும் திருநங்கைகள் பற்றி தவறாக செல்வதுதான் என குற்றம்சாட்டி சஜினா காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் “நாங்கள் பிரியாணி கடை வைத்திருக்கும் இடத்திற்கு எதிரே ஒருவர் கருவாடுகளை பரப்பி விற்பனை செய்கிறார். அதுமட்டுமல்லாமல் அவர் எங்கள் கடை குறித்து வதந்தியை மக்கள் மத்தியில் பரப்புகிறார். என் கடையில் பணிபுரியும் திருநங்கைகளையும் என்னையும் கடுமையாக தாக்கி துன்புறுத்தினார். நாங்கள் ஒழுக்கமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால் இந்த சமூகம் எங்களை மரியாதையுடன் வாழ அனுமதிக்கவில்லை.
பிறகு நாங்கள் என்ன செய்ய முடியும். எங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு அறுவை சிகிச்சை செய்ய சேர்த்து வைத்த பணத்தை வைத்து கடை ஆரம்பித்தேன். ஆனால் தற்போது வியாபாரத்தை தொடர்வதற்கான வழி இல்லாமல் நிற்கின்றேன். 300 பிரியாணிகள் விற்பனையான இந்த கடையில் தற்போது 20 பிரியாணிதான் விற்பனையாகிறது.
அதற்கு காரணம் அக்கம்பக்கம் கடை வைத்திருப்பவர்கள் தான்” என வேதனையுடன் காணொளியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அந்த காணொளி வைரலாக அதனைப் பார்த்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா போனில் தொடர்பு கொண்டு சாஜினாக்கு ஆறுதல் கூறியதோடு தக்க பாதுகாப்பு கொடுப்பதாகவும் உறுதி கூறினார். இதனால் தற்போது போலீசார் திருநங்கைகள் கொடுத்த புகாரில் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.