Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மரம் விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 23 லட்சம் நிவாரண உதவித்தொகை.… வழங்கிய கலெக்டர்…!!!

மரம் விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 23 லட்சம் நிவாரண உதவி தொகையை கலெக்டர் விஷ்ணு வழங்கியுள்ளார். 

நெல்லை அருகில் பத்தமடை குளக்கரை பகுதியில் இருக்கின்ற மரங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது பத்தமடையில் வசித்த ஆட்டோ ஓட்டுநர் காதர் மைதீன்(35). இவருடைய மனைவி பக்கீராள் பானு(29). இவர்களுடைய மகன் 4 வயதுடைய ஷேக் மன்சூர், பக்கீராள் பானுவின் சகோதரி 27 வயதுடைய ரகுமத் பீவி, இவருடைய மகள் 7 வயதுடைய அசினா பாத்திமா ஆகிய 5 பேரும் காதர் மைதீன் ஆட்டோவில் நெல்லைக்கு சென்றார்கள். ஆட்டோவை காதர் மைதீன் ஓட்டி சென்றுள்ளார்.

அப்போது பத்தமடை குளத்து பகுதியில் உள்ள ரோட்டில் செல்லும்போது பழமைவாய்ந்த ராட்சத ஆலமரம் வேரோடு சாய்ந்து ஆட்டோ மீது விழுந்ததில் காதர் மைதீன், ரகுமத் பீவி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளனர். மற்ற 3 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சேர்ன்மாதேவி ரவுண்டானா பகுதியில் உறவினர்கள் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 5 லட்சமும், நெடுஞ்சாலை துறை சார்பாக தலா ரூபாய் 5 லட்சம் என மொத்தம் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று அறிவித்துள்ளார். மேலும் படுகாயமடைந்த மூன்று பேருக்கும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 50,000 நெடுஞ்சாலை துறை சார்பாக ரூபாய் தலா ரூபாய் 50,000 என காயமடைந்த ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதனை அடுத்து நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு நேற்று பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி மொத்தம் ரூபாய் 23 லட்சம் நிவாரண தொகைக்கான காசோலையை வழங்கினார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், சேர்ன்மாதேவி உதவி கலெக்டர் சிந்து, சேர்மாதேவி தாசில்தார் பாலசுப்பிரமணியன் மருத்துவர்கள் உடன் இருந்தார்கள்.

இந்நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் காதர் மைதீன், ரகுமத் பீவி ஆகியோரது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பத்தமடை மலுக்காமலி ஜூம்மா பள்ளிவாசல் மையவாடியில் அடக்கம் செய்தனர். இதற்கிடையில் மரம் விழுந்து 2 பேர் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண தொகையாக ரூபாய் 50 லட்சமாக உயர்த்தி கொடுக்க வேண்டும். குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை போட்டு கொடுக்க வேண்டும்.

மேலும் அவர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும். சாலைப் பணியை உரிய பாதுகாப்புடன் தொடர வேண்டும். விபத்துக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ மாநில பொதுச்செயலாளராக அகமது நவவி வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் சாலை விரிவாக்கப் பணியில் ஈடுபட்ட அஜாக்கிரதையாக செயல்பட்ட பொக்லைன் ஆப்பரேட்டர் கோவில்பட்டி பகுதியில் வசித்த வெயில்ராஜாவை பத்தமடை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |