மரங்கள் அடர்ந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் தம்பிக்கோட்டை மறவக்காடு கிராமத்தில் இருந்து உப்பளம் செல்லும் சாலையோரத்தில் ஒரு பாலித்தீன் பைகளில் ஏதோ கிடப்பதாக அதிராம்பட்டினம் போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்பு குழுமம் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஐயப்பசாமி மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீசார் என அனைவரும் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.
இதில் உப்பளம் செல்லும் சாலையின் ஓரத்தில் புதரில் இரண்டு பச்சை நிற பாலித்தீன் பைகள் கிடந்துள்ளது. அந்த பைகளில் 28 பண்டல்களில் 56 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனை காவல்துறையினர் கைப்பற்றி பின்னர் நாகப்பட்டினம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு அதிகாரிக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் கஞ்சா பொட்டலங்கள் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயற்சி நடந்ததா? அல்லது வெளி மாநிலத்துக்கு கொண்டு செல்ல பதுக்கப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.