2008ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பில் உருவாக்கப்பட்ட மயிலம் தொகுதியில் இதுவரை இருமுறை தேர்தல் நடைபெற்றுள்ளது. இங்கு ஒருமுறை அதிமுகவும், ஒருமுறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. தற்போதைய எம்.எல்.ஏ திமுகவின் மாசிலாமணி. மயிலம் தொகுதியில் மொத்தம் வாக்காளர்களின் எண்ணிக்கை 2,19,868 ஆகும்.
மயில் வடிவ மலையாக மாறி தவம் புரிந்த சூரபத்மனின் கோரிக்கையின் படி மயிலசலம் என அழைக்கப்பட்டு அதுவே மருவி மயிலம் ஆனதாக கூறப்படுகிறது. வெண்மணியாத்தூரில் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சிப்காட் அதிமுக அரசால் கண்டுகொள்ளபடாமல் விடபட்டதாக கூறப்படுகிறது. சவுக்கு அதிகளவில் விடுவிக்க படுவதால் காகித தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும் என்றும், மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.
நிரந்தர பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்றும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரசு கலைக்கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். கூட்டேரிப்பட்டு பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்றும் கூறுகின்றனர். மயிலம் பகுதியை தலைமை இடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்கப்பட வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாகும்.