Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மயானம் செல்ல சாலை இல்லை… மாணவரின் உடலை… வயல் வழியாக தூக்கி… சென்ற அவல நிலை…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மயானம் செல்வதற்கு சாலை வசதி இல்லாததால் உயிரிழந்த மாணவரின் உடலை உறவினர்கள் வயல் வழியாக தூக்கி சென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ்குடி பகுதியில் 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அங்கு வசித்து வரும் பொது மக்களுக்கான மயான கொட்டகை இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு செல்வதற்கு எந்த ஒரு சாலை வசதியும் இல்லை. அதனால் அங்கு உயிரிழந்தவர்களின் உடலை எடுத்துச் செல்வதில் அதிகளவு அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த 17 வயது மாணவர் ஒருவர் உடல் நலக் குறைவால் திடீரென உயிரிழந்தார். அந்த மாணவருக்கு இறுதி சடங்குகள் அனைத்தும் செய்யப்பட்டு தகனம் செய்வதற்காக அவரின் உடல் நேற்று எடுத்து செல்லப்பட்டது.

ஆனால் மயானம் செல்வதற்கு சாலை வசதி இல்லாத காரணத்தால், அவரின் உறவினர்கள் அங்கு உள்ள வயல் பகுதியில் இறங்கி மாணவரின் உடலை எடுத்துச் சென்றனர். இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, “எங்கள் பகுதியில் உயிர் இழக்கும் நபர்களை தூக்கிச் சென்று தகனம் செய்வதற்கு போதிய சாலை வசதி கிடையாது. அதனால் உயிரிழந்த அனைவரையும் இவ்வாறு தூக்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு சாலை வசதி செய்து தருமாறு அதிகாரிகளிடம் கூரியும் எந்த ஒரு நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை. இனி சாலை வசதி செய்து தரவில்லை என்றால் கட்டாயம் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம்” என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |