ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை அருகே முழகுமூடு முப்பந்தாங்கள் பகுதியில் அமல ராஜேஷ் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக அழகிய மண்டபம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்து விவாகரத்து ஆகியுள்ளது. அதன் பிறகு குளச்சல் அருகே வாணியக்குடி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை 2-வதாக ராஜேஷ் திருமணம் செய்து கொண்டார். கடந்த 1 1/2 வருடங்களுக்கு முன்பாக ராஜேஷின் 2-வது மனைவியும் அவரை பிரிந்து வாணியக்குடி பகுதியில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
கடந்த வாரம் ராஜேஷ் தன்னுடைய மனைவியை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் ராஜேஷ் மனைவி வர மறுத்ததால் மிகுந்த மன வேதனையில் அவர் இருந்துள்ளார். இதன் காரணமாக ராஜேஷ் பூதவனம் பகுதியில் உள்ள ஒரு பாறையின் மேல் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கொற்றிகோடு காவல்துறையினர், ராஜேஷின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.