பாகிஸ்தானில் மின்தடை குறித்து மத வழிபாட்டு தலத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான பொருளாதார நெருக்கடியால் மின் தடை ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டில் பெஷாவர் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் லாகி மார்வட் மாவட்டத்தில் இசக் ஹெல் பகுதியில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் ஒன்று உள்ளது . இந்த வழிபாட்டு தலத்தில் நேற்று வழிபாடு நடைபெற்றுள்ளது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான இஸ்லாமிய மதத்தினர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் வழிபாட்டை முடித்துவிட்டு அங்கு அனைவரும் பேசிக்கொண்டிருந்தபோது தங்கள் பகுதியில் நிலவி வரும் தொடர் மின் தடை குறித்து சிலர் பேசியுள்ளனர்.
அப்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரும் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிகளால் ஒருவரை ஒருவர் சரமாரியாக சுட்டு தள்ளினார். இந்த துப்பாக்கிச்சூட்டால் அதிர்ச்சியடைந்தவர்கள் மத வழிபாட்டு தலத்திலிருந்து அலறியடித்து ஓடினர். இந்த துப்பாக்கி சூட்டினால் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 6 வயது குழந்தை உட்பட 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.