Categories
அரசியல் தேசிய செய்திகள்

மத்திய பிரதேசம், சிக்கிம் மற்றும் கேரளா மாநில பாஜக தலைவர்கள் நியமனம்!

மத்திய பிரதேசம், சிக்கிம் மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு பாஜக தலைவர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜக மாநில தலைவர் பதவி நிரப்பப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெகத் பிரகாஷ் நட்டா, மத்திய பிரதேசம், சிக்கிம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு பாஜக தலைவர்களை நியமித்துள்ளார். 

கேரள மாநில பாஜக தலைவராக சுரேந்திரனும், மத்திய பிரதேச மாநில பாஜக தலைவராக விஷ்ணு தத் சர்மா மற்றும் சிக்கிம் மாநில பாஜக தலைவராக தல் பகதூர் சவுகான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்புகளை உடனடியாக நடைமுறைப்படுத்த பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது. ஆனால் தமிழகத்திற்கான பாஜக தலைவர்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை. 

தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்திரராஜன் கடந்த 2014ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவரது பதவிக்காலம் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைய இருந்தது. இதனிடையே செப்டம்பர் மாதம் அவர் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். 

இதைத் தொடர்ந்து அவர் தனது பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அன்று முதல் பாஜகவுக்கு இதுவரை தலைவரே நியமிக்கப்படவில்லை. அந்த பதவிக்கு எச் ராஜா, வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன், கேடி ராகவன், பொன் ராதாகிருஷ்ணன், குப்புராமு உள்ளிட்டோர் போட்டியில் உள்ளனர். மேலும் சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த சசிகலா புஷ்பாவுக்கு அப்பதவி கொடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. 

இதனிடையே தமிழகத்தின் பாஜக தலைவராக யாரை நியமிப்பது என்ற கருத்துக் கேட்பு கூட்டம் கடந்த ஜனவரி முதல் வாரத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டு தலைவர் நியமிக்கப்பட்டால் தான் தமிழகத்தில் பாஜக காலூன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும். எனவே தமிழகத்திற்கு பாஜக தலைவர் விரைவில் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |