நேற்று மாலை மத்திய அமைச்சரவை விரிவாக்கத்துடன் மாற்றம் செய்யப்பட்டது. அதற்கான 43 புதிய மத்திய அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனின் பெயர் இடம்பெற்றிருந்தது. இதனைத்தொடர்ந்து புதிய மத்திய மந்திரிகளின் பதவியேற்பு விழா, இன்று மாலை 6 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. அதில் மத்திய அமைச்சர் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
தமிழக பா.ஜ.கவின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன், 2019-ம் ஆண்டில் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதனையடுத்து, ஓரிரு மாதங்கள் கழித்து பா.ஜ.க தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டார். பா.ஜ.க தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டதிலிருந்து அவர், தமிழகத்தில் பா.ஜ.க வளர்த்தெடுக்கத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் 15 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார். தேசிய பட்டியலின ஆணையத்தின் துணைத் தலைவராகப் பதவி வகித்துள்ளார். பா.ஜ.க.வின் மாநில தலைவராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.