மத்திய அரசு ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.
இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகளால் பலர் தங்கள் பணம் மற்றும் வாழ்க்கையை இழந்து வருவதாகவும் அதனை மத்திய அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் கூறியுள்ளார். பப்ஜி என்ற ஆன்லைன் விளையாடால் பலருக்கு ஏற்பட்ட பாதிப்பினை தொடர்ந்து அளிக்கப்பட்ட புகார் காரணமாக அந்த விளையாட்டு தடைசெய்யப்பட்டது. ஆனால் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெயரை மாற்றம் செய்து அதேபோல் சில விளையாட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதனால் பலர் தங்கள் வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர் என அவர் கூறியுள்ளார்.
இதேபோல் ப்ளூவேல் எனும் ஆன்லைன் விளையாட்டால் பலர் தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து எழுந்த புகாரால் அந்த விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இதேபோல் சில விளையாட்டுகள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் வாழ்க்கையையும் பாதிப்படையச் செய்கிறது. இந்த விளையாட்டுக்களை மத்திய அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் மற்றும் தடை செய்ய வேண்டும் என ஜி.கே வாசன் கேட்டுக்கொண்டார்.
தற்போதுள்ள காலகட்டத்தில் ஆன்லைன் கல்வி போன்ற காரணங்களுக்காக குழந்தைகள் அதிக நேரம் செல்போன் கணினி மற்றும் லேப்டாப் போன்றவற்றை உபயோகிக்கின்றனர். அவ்வாறு அவர்கள் உபயோகிக்கும் பட்சத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும் மத்திய அரசு ஆன்லைன் விளையாட்டுகளை கொண்டு வந்து அதன் மூலம் பணம் பறிக்கும் தொழிலை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் எனவும் இதனால் பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.