மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மத்திய நுகர்வோர் மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சராக இருந்தவர் ராம்விலாஸ் பஸ்வான். 74 வயதுடைய பஸ்வான் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டு வருபவர். திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையொட்டி சிகிச்சை பலனின்றி ராம்விலாஸ் பஸ்வான் நேற்று உயிரிழந்தார். மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் மறைவிற்கு பிரதமர்,உள்துறை அமைச்சர்,தமிழக முதல்வர்,திமுக தலைவர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.
ராம்விலாஸ் பஸ்வான் மரணச் செய்தியை அறிந்த பிரதமர் மோடி “பஸ்வனின் மறைவு தனக்கு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு என்றும், எனது நண்பரை நான் இழந்துள்ளேன்”எனவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். மேலும் ஏழைகளின் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்ற வேண்டும் என பணியாற்றியவர் ராம்விலாஸ் பஸ்வான் என்று புகழாரம் சூட்டினார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ராம்விலாஸ் பஸ்வானின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.