மது போதையில் வாலிபர் தள்ளிவிட்டதால் தொழிலாளி பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈத்தவிளை பகுதியில் தொழிலாளியான முத்தையன்(63) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் முத்தையன் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக குழித்துறைக்கு நடந்து சென்றுள்ளார். பின்னர் பொருட்களை வாங்கி விட்டு சாலையோரமாக நடந்து சென்ற போது மருதங்கோடு கோணம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜித் என்பவர் குடிபோதையில் முத்தையனை வழி மறித்துள்ளார். அப்போது குடிப்பதற்கு பணம் கேட்டு ஸ்ரீஜித் தொந்தரவு செய்துள்ளார். அதற்கு முத்தையன் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறிவிட்டு வீட்டிற்கு செல்ல முயன்ற போது வாலிபர் தொழிலாளியை அங்கிருந்து செல்ல விடாமல் தகராறு செய்துள்ளார்.
இதில் கோபமடைந்த ஸ்ரீஜித் முத்தையனை பிடித்து சாலையில் தள்ளியதால் அவ்வழியாக வந்த அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் முத்தையனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஸ்ரீஜித்தை கைது செய்து விசாரண மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.