அரசியல் பிரமுகர் குடும்பத்தினரிடையே ஏற்ப்பட்ட முன்பகை காரணமாக கொலை செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
மதுரை கீரைத்துறை பகுதியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் குடும்பத்தினரிடையே முன்பகை காரணமாக பழிக்குபழியாக இதுவரையில் 15 க்கும் மேற்பட்ட கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டாலும் அடுத்தடுத்து நபர்கள் கொலையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஒருவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்ததற்கு பழிவாங்கும் நோக்கிலும், தங்களின் எதிரிகளுக்கு அச்சம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் எதிர்தரப்பினர் திட்டமிட்டனர்.
இதையடுத்து எதிர்தரப்பை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் காரில் பின் தொடர்ந்து வந்தது. அப்போது கீழ் மதுரை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், முனிசாமி ஆகிய இருவரையும் கீழவெளி பகுதியில் நடந்து செல்லும் போது கொலை செய்ய முயன்ற போது இருவரும் தப்பி ஓடினர். அவருடன் வந்த அவர்களின் நண்பரான காவல்துறை தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கும் உத்தங்குடி பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்ற இளைஞர் கையில் சிக்கினார். அந்த கும்பல் ஆத்திரத்தில் தாங்கள் கொண்டு வந்த ஆயிதத்தை கொண்டு அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து தலையை துண்டித்து வீசிச் சென்றனர்.
கொலைச்சம்பவம் போக்குவரத்து சிக்னல் அருகே நடைபெற்றதால் கொலையின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியது. அரசியல் கட்சியினரின் பழிக்குபழி நடந்த கொலையில் தப்பி ஓடிய குருசாமியின் ஆதரவாளரான அலெக்ஸ், அழகுராஜா, பழனி ,முருகன் உள்ளிட்ட 4 பேர் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் அலெக்ஸ் என்ற சின்ன அலெக்ஸ் திண்டுக்கல் கோர்ட்டில் இன்று காலை சரணடைந்தார். அவரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் பாலமுருகன் உத்தரவிட்டார்.