மதுரையில் உள்ள, கோரிப்பாளையத்தில் திருநங்கைகள் புதிதாக திறந்துள்ள ட்ரான்ஸ் கிச்சன் என்ற உணவகம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் வீட்டிலேயே உணவை சமைத்து சிறிய நிகழ்ச்சிகளுக்கு வழங்கிவந்த ஜெயசித்ரா சக திருநங்கைகளுடன் சேர்ந்து, இந்த உணவகத்தை தொடங்கியுள்ளனர். திருநங்கைகளின் முயற்சியை பாராட்டும் விதமாக இந்த உணவகத்தை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் நேரில் வந்து திறந்து வைத்தார்.
உணவு சமைத்தல் மற்றும் பரிமாறுதல் போன்ற அனைத்து விதமான பணிகளையும் திருநங்கைகளை செய்கின்றனர். இந்த உணவகத்தில் 12 திருநங்கைகள் பணியாற்றுகிறார்கள். டிரான்ஸ் கிச்சன் உணவகத்திற்கு மக்கள் தரும் ஆதரவின் மூலம் தொடர்ந்து உணவகங்கள் திறக்கப்படுகிறது. இதன் மூலமாக பல திருநங்கைகளின் வாழ்வாதாரம் முன்னேறும் என்று ஜெயசித்ரா தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த உணவகத்தில் காலை மதியம் மற்றும் இரவும் சாப்பாடுகள் கிடைக்கின்றன.