சென்னையில் புற்றீசல் போல் பெருகி உள்ள ஸ்பா மற்றும் அழகு நிலையங்கள் மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடப்பதாகவும், அதற்கு காவல் நிலைய அதிகாரிகள் சிலர் துணை போவதாகவும், புகார் எழுந்தது.
புதிதாக ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்கள் துவங்குவதற்கு விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரின் சான்றிதழ் கட்டாயம். அதில் ஏராளமான அளவில் லஞ்சம் புரல்வதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த வாரம் சென்னை மாநகரம் மற்றும் புறநகர் விபச்சாரத் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அதன் எதிரொலியாக சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் ஸ்பா அழகு நிலையங்கள் மற்றும் மசாஜ் சென்டர்களை சோதனையிட்ட போலீசார் அவற்றின் உட்கட்டமைப்புகளை ஆய்வு செய்தனர். மசாஜ் சென்டர்கள் நடத்த முறையான பிசியோதரபி சான்றிதழ் பெற்று உள்ளனரா, ஏற்கனவே பெற்ற உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளனவா, இளம் பெண்களை அடைத்து வைத்து பாலியல் தொழில் செய்கின்றனரா என சோதிக்கப்பட்டது.
151 இடங்களில் செயல்படும் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்கள் சோதனை செய்யப்பட்டன. அண்ணா நகர், தியாகராய நகர், கீழ்ப்பாக்கம், வடபழனி, அம்பத்தூர் போன்ற இடங்களில் சோதனைகள் அதிக அளவில் நடைபெற்றன. அப்போது 64 ஸ்பா மற்றும் மசாஜ் செண்டர்கள் உரிமம் பெறாமல் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றில் சிலவற்றில் ஹேப்பி என்டிங் என்ற பெயரில் விபசாரம் நடப்பதும் உறுதியானது.
அதில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை மீட்ட போலீசார் அதற்கு துணை போனவர்களையும் கைது செய்துள்ளனர். தவிர மேலும் 43 மசாஜ் செண்டர்கள் மற்றும் ஸ்பாக்கள் மூடப்பட்டுள்ளன. போலீஸ் சோதனைக்கு பயந்து முன்கூட்டியே அவற்றை பூட்டி சென்றுள்ளனரா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. உரிமம் பெறாத ஸ்பா மற்றும் மசாஜ் செண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சிக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதால் அவற்றிற்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இனி வாரம் தோறும் சென்னை முழுவதும் இது போன்ற திடீர் சோதனைகள் தொடரும் எனவும் காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முறைகேடாக செயல்பட்ட ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் பின்னணியில் சில காவல்துறை அதிகாரிகள் இருப்பதாகவும், அவர்களுக்கு மாதம்தோறும் மாமுல் கொட்டியதாகவும், புகார் எழுந்து இருப்பதால் அவர்களும் கலக்கமடைந்துள்ளனர்.