திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக மக்கும், மக்காத குப்பைகள் தரம்பிரித்தல் தொடர்பாக கண்காட்சி நடந்தது. இக்கண்காட்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். அத்துடன் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக பால்வளத் துறை அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான ஆவடி சா.மு.நாசர், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.மஸ்தான் போன்றோர் ரிப்பன்வெட்டி துவங்கி வைத்து மக்கும், மக்காத குப்பை கண்காட்சியை நேரில் பார்வையிட்டனர்.
இதையடுத்து அங்கு அமைக்கப்பட்ட நம்ம ஊரு சூப்பரு திட்டத்தை துவங்கிவைத்து செல்பி ஸ்டாண்டில் நின்று அமைச்சர்கள் இரண்டு பேரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதனை தொடர்ந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக கிறிஸ்தவர் மகளிர், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள், உலமாக்கள் நலவாரிய பயனாளிகள் 536 பேருக்கு ரூபாய்.46 லட்சத்து 28 ஆயிரத்து 641 மதிப்பிலான நலத்திட்ட உதவிக்கான ஆணைகளை அமைச்சர்கள் ஆவடி சா.மு.நாசர், செஞ்சி கே. மஸ்தான் போன்றோர் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் சுரேஷ் குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஜெயக்குமார், எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன், கிருஷ்ணசாமி, சந்திரன், கோவிந்தராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர் மதுசூதனன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் ராஜவேலு மற்றும் பலர் பங்கேற்றனர்.