தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் கொரோனா கட்டுபாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக, மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் கொரோனா அதிகரித்து வரும் நிலையிலும், பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் வரும் வியாழக்கிழமை வரை இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு 10,300 பேருந்துகளும், பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு 6,468 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.