தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அதிநவீன புற்றுநோய் கருவியை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டீன் நேரு தெரிவித்தார்.
தூத்துக்குடியில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று முன்தினம் இந்திய மருத்துவ கழகம் சார்பாக புற்றுநோய் சிகிச்சையில் நவீன முறைகள் குறித்து மருத்துவர்களுக்கான கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய மருத்துவ கழக தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கிய இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை டீன் நேரு, டாக்டர்கள் மதிப் பிரகாசம், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் சிறப்பு விருந்தினராக இந்திய மருத்துவ கவுன்சிலின் முன்னாள் தேசிய தலைவர் அருள்ராஜ் பங்கேற்று நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்.
இதை தொடர்ந்து புற்றுநோய் கண்டறிதல், குணப்படுத்துதல், நவீன சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்கள் மைதிலிபால், புளோரா மற்றும் டாக்டர்கள் விளக்கி கூறினார்கள். சமீப காலத்தில் சிகரெட், மூக்குப்பொடி, புகையிலை பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்துவதால் அதிக அளவில் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்தியாவில் நுரையீரல் புற்று, வாய்ப்புற்று, பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்று, மார்பகப் புற்று ஆகியவை அதிகமாக ஏற்பட்டுள்ள நிலையில் ஐந்து சதவீதம் குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் குழந்தைகளின் எடை குறைதல், உணவு சாப்பிடாமல் இருத்தல், தொடர் காய்ச்சல், உடலின் வெளிப்பகுதியில் கட்டி ஏற்படுதல் போன்ற அறிகுறி இருக்கின்ற குழந்தைகளை உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் அதே நேரத்தில் அலோபதி என்ற முறையில் சிறப்பான சிகிச்சை புற்றுநோய்க்கு அளிக்கப்பட்டு வருகிறது.
தொடக்க காலத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகு கதிர்வீச்சு ஹீமோதெரபி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் செல்லை மட்டும் தனியாக அழிக்கும் டார்கெட்டடு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனை அடுத்து சமீப காலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து அந்த செல்களை அழிக்கும் இம்மியூனோ தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடக்க காலத்தில் புற்று நோய் சிகிச்சைக்கு வந்தால் அதனை முழுமையாக குணப்படுத்திவிடலாம். புற்றுநோய் நன்கு முற்றிய பிறகு சிகிச்சை பெற்றால் அதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். ஆனால் முழுமையாக அழிக்க முடியாது. எனவே தாமதமாக அறிகுறி தெரிபவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் டீன் நேரு பேசியதாவது, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தேசிய நல்வாழ்வு குழுமம் சார்பாக ரூ 16 கோடி செலவில் புற்றுநோய் சிகிச்சைக்காக லீனியர் ஆக்சிலேட்டர் என்ற நவீன கருவி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 4 வருடங்களாக இந்த கருவி செயல்பட்டு வரும் நிலையில் இதுவரை 372 நோயாளிகள் சிகிச்சை பெற்று இருக்கின்றனர்.
அரசு மருத்துவர்கள் இந்த கருவியை பயன்படுத்தி தரமான சிகிச்சை அளித்து வந்துள்ளனர். தூத்துக்குடி தவிர நெல்லை, மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும் இந்த கருவியை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தக் கருவியின் முக்கியத்துவத்தை மக்கள் இன்னும் சரிவர தெரிந்து கொள்ளவில்லை. எனவே இதனை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட இந்திய மருத்துவ கழக பொருளாளர் ஆர்த்தி கண்ணன், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், தூத்துக்குடி அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, டாக்டர்கள் குமரன், சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர். இந்திய மருத்துவ கழக செயலாளர் சிவசைலம் நன்றி தெரிவித்தார்.