எரிவாயு உருளை முன்பதிவு செய்துகொள்ளும் புதிய வசதி ஒன்றை பிபிசிஎல் அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் குரல் -வழி மூலமாக எரிவாயு உருளையை முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது, பிபிசிஎல் நிறுவனம் ஸ்மார்ட்போன் மற்றும் இணைய வசதி இல்லாத வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு இந்த குரல் வழி மூலமாக சிலிண்டரை முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை உருவாக்கியுள்ளது.
மேலும் இந்த புதிய வசதியை ‘அல்ட்ராகேஷ் டெக்னாலஜிஸ்’ என்ற நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது. இதை அடுத்து இணைய வசதி இல்லாத சாதாரண செல்போனில் இருந்து இதற்கான முன் பதிவினை 080-4516-3354 என்ற எண்ணுக்கு அழைப்பதன் மூலம் எளிமையான முறையில் வாடிக்கையாளர்கள் சிலிண்டரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து யுபிஐ 123பே என்ற முறையின் மூலம் அதற்கான பணத்தையும் செலுத்தலாம் என தெரிவித்துள்ளது. இவ்வாறு அறிமுகம் செய்துள்ள புதிய சேவையின் மூலம் கிராமப்புற பகுதியில் உள்ள 4 கோடி பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள் பலன் அடைவார்கள் என்று பிபிசிஎல் தெரிவித்துள்ளது.