கொரோனா தடுப்பூசி போடுவதற்கான போலியான செய்திகளை மக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. மிக விரைவில் அது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் ஜனவரி 13-ஆம் தேதி கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதனையடுத்து கொரோனா தடுப்பூசி போடுவதற்காக போலியான செயலிகளை பயன்படுத்த வேண்டாம். அதனால் தகவல்கள் திருடப்படலாம் என மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இத்தகைய செயல்கள் எதையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மத்திய சுகாதாரத்துறை அறிமுகப்படுத்த வில்லை என்று தெரிவித்துள்ளது.