உணவே மருந்து என்ற காலம் சென்று மருந்தை உணவாக எடுத்துக் கொள்ளும் காலத்தில் அனைவரும் வாழ்ந்து வருகின்றோம். நோயினால் பாதிக்கப்படுவதற்கு நமது உணவு முறையில் ஏற்பட்ட மாற்றம் தான் முக்கிய காரணம். உடலுக்கு கேடு தரும் உணவுப் பொருட்களை தேடித் தேடி சாப்பிடுவதனால் உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுப் பொருட்களில் முக்கியமானவை பற்றிய தொகுப்பு.
எண்ணெய் பலகாரங்கள்
இனிப்பு வகைகள் கார வகைகள் என உணவுப் பொருட்கள் எண்ணெயில் பொரித்த எடுப்பதுண்டு. இது பாமாயில் அல்லது டால்டாவில் செய்யப்படுவதால் இது சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வீட்டில் செய்யும் இனிப்பை சாப்பிடலாம் ஆனால் அதில் வெல்லம், பனங்கருப்பட்டி, நாட்டு சர்க்கரை, தேன் போன்றவற்றை இனிப்பிற்காக சேர்த்துக்கொள்ளலாம்.
துரித உணவுகள்
நிமிடத்தில் தயாராகும் உணவுகள் அனைத்துமே தவிர்க்கப்பட வேண்டியது. அரைகுறையாக வெந்து சாப்பிடப்படும் உணவுகள் நமது உடலுக்கு கேடு விளைவிக்கும். நூடுல்சில் இருந்து ஐந்து நிமிடத்தில் தயார் செய்யும் இன்ஸ்டன்ட் உணவுகள் வரை அனைத்தையும் தவிர்ப்பது நல்லது. இந்த உணவுகள் செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்பட்டு பதப்படுத்தப்படுகிறது. இது உடலுக்கு நன்மை கொடுப்பதைக் காட்டிலும் கேடு விளைவிக்கின்றது. எப்போதாவது ஒருமுறை சாப்பிடலாம் அடிக்கடி சாப்பிட்டால் உடல் நலக் கோளாறுகள் ஏற்படும்.
பட்டை தீட்டப்பட்ட உணவுகள்
பட்டை தீட்டப்பட்டிருக்கும் அனைத்து உணவுகளும் சாப்பிடக் கூடாதவை. அரிசியை பாலீஷ் பண்ணும் போது அதில் உள்ள அனைத்து சத்துக்களும் நீக்கப்படுகிறது. அதோடு அந்த அரிசியில் இருக்கும் மாவுச்சத்து உடல் எடையை அதிகரிக்க செய்கிறது. பட்டை தீட்டப்பட்டு இருக்கும் வெள்ளை அரிசிக்கு பாரம்பரியமாக சமைக்கும் அரிசிக்கும் அதிக வேறுபாடுகள் உள்ளது. பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசியில் நார்ச்சத்து மிகவும் குறைவாக இருப்பதால் அது சர்க்கரையை ரத்தத்தில் அதிகரிக்கச் செய்யும் காரணியாக அமைகிறது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆயுளை குறைக்கும் அபாயம் கொண்டது. எந்த வகையில் அவை பதப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை வைத்து உணவை வகைப்படுத்த முடியும். காய்கறிகள், பழங்கள், விதைகள், தானியங்கள், இறைச்சி, முட்டைகள் என பல பொருட்கள் பதபடுத்தப்படுகின்றது. சுவை மாறாமல் இருக்கவும் கெடாமல் இருக்கவும் பதபடுத்தப்படுகின்றது. தொழிற்சாலைகளில் அல்ட்ரா பதப்படுத்திய உணவுகள் என்று மிகப்பெரிய பட்டியல் இருக்கும். இதில் 5க்கும் அதிகமான பொருட்கள் கலக்கப்பட்டு இருந்தால் அது அல்ட்ரா பதப்படுத்திய உணவாக இருக்கும். இது போன்றவற்றைத் தவிர்ப்பது உடலுக்கு நல்லது.