உலக அளவில் கொரோனா மற்றும் குரங்கம்மை வைரஸ் போன்றவைகள் பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், பருவநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் சளி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு அதிக அளவில் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். சென்னையில் மட்டும் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதேபோன்று புதுவை மற்றும் காரைக்காலிலும் கடந்த 10 நாட்களில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இதன் காரணமாக புதுவையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற 25-ம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது கோயம்புத்தூர் மாவட்டத்திலும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கு கடந்த மாதத்தில் மட்டும் 81 குழந்தைகள் சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் 429 குழந்தைகள் மருத்துவமனையில் காய்ச்சல், சளி போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சென்றுள்ளனர்.
இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதால், கைகளை சுத்தமாக வைத்திருத்தல், முகக் கவசம் அணிதல், நீரை நன்றாக கொதிக்க வைத்து ஆற வைத்து குடித்தல், தடுப்பூசி போடுதல் போன்றவற்றை முறையாக பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதோட குழந்தைகளுக்கு லேசான சளி, காய்ச்சல், இருமல் போன்றவைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மேலும் காய்ச்சலால் பாதிக்கப்படும் ஒரு குழந்தையின் எச்சில் மூலமாக மற்றொரு குழந்தைக்கும் வைரஸ் காய்ச்சல் பரவுவதால் காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தையை பள்ளிக்கு யாரும் அனுப்ப வேண்டாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.