ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். அவ்வகையில் நேற்று தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. சராசரியை விட இந்த வருடம் கூடுதலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அனைத்துப் பகுதிகளிலும் கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருந்த சூழலில், பருவமழை தொடங்கியுள்ளது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கன மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் குழித்துறை, தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.