சென்னை மாநகர காவல் ஆணையர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த சில நாட்களாக மோசடி கும்பல் பல புதிய யுத்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுகின்றனர். அதேபோல் தற்போது பொதுமக்களின் கைபேசி எண்ணுக்கு அவர்கள் வீட்டு மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும் என்றும்,. சென்ற மாத கட்டணம் செலுத்தப்படவில்லை எனவும், உடனே மின்வாரிய அதிகாரியை கைப்பேசி அல்லது whatsapp மூலம் தொடர்பு கொள்ளுங்கள் என்று ஒரு கைபேசி எண்ணை சேர்த்து குறுஞ்செய்தி ஒன்றை அனுப்புகின்றனர். இதனை நம்பும் பொதுமக்கள் அவர்கள் கூறும் செயலிகளை பதிவிறக்கம் செய்கின்றனர்.
இதன் மூலம் மக்களின் கைபேசியில் உள்ள விவரங்கள் அனைத்தையும் மோசடி கும்பல் திருட முடியும். இதனையடுத்து அவர்கள் 10-க்கும் குறைந்த அளவில் ரீசார்ஜ் செய்ய சொல்லுவார்கள். அப்போது பொதுமக்கள் பண பரிமாற்றத்திற்கு பயன்படுத்தும் பயனாளர் குறியீடு, கடவுச்சொல் ஆகியவற்றை சைபர் குற்றவாளிகள் தெரிந்து கொள்வார்கள். மேலும் அவர்கள் கூறும் செயலிகளை பதிவிறக்கம் செய்தால் பணப்பரிமாற்றத்தில் ஒருமுறை மட்டும் பயன்படும் கடவுச்சொல்லையும் குற்றவாளிகள் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
இதன்மூலம் குற்றவாளிகள் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எளிதில் கொள்ளையடிக்க முடியும். மேலும் பொதுமக்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வரும் போலியான குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். இந்நிலையில் அந்த குறுஞ்செய்தியில் உள்ள எண்ணை எக்காரணம் கொண்டும் தொடர்பு கொள்ள வேண்டாம். இந்நிலையில் மின்வாரியத்தில் இருந்து எந்த ஒரு செய்திகளும் வராது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.