மசாலா நிறுவன உரிமையாளரிடம் இருந்து 2 1/4 லட்ச ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பழையபாளையம் பகுதியில் ஸ்ரீ வர்ஷன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மபிரியா(45) என்ற மனைவி உள்ளார். இவர் மசாலா நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் மூலப்பொருட்கள் தேவையான மிளகு வாங்குவதற்கு பத்மபிரியா ஆன்லைனில் பார்த்துள்ளார். அப்போது ஒரு நிறுவனத்தில் மிளகு இருப்பதாக விளம்பரம் இருந்துள்ளது. அதனைப் பார்த்து பத்மபிரியா 1 டன் மிளக்கிற்கு ஆர்டர் கொடுத்துள்ளார். இதனையடுத்து அவர்கள் அனுப்பிய வங்கி கணக்கிற்கு பத்மபிரியா கடந்த 2021-ஆம் ஆண்டு 2 லட்சத்து 26 ஆயிரத்து 800 ரூபாயை அனுப்பியுள்ளார்.
ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் மிளகை அனுப்பாததால் தான் ஏமாற்றப்பட்டது பத்மபிரியாவிற்கு தெரியவந்தது. இதுகுறித்து பத்மபிரியா ஈரோடு சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜானகிராமனிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் சம்பந்தப்பட்ட வங்கி கணக்கை முடக்கினர். பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை நடத்தி வருபவர் மூலம் பத்மபிரியா வழங்கிய பணம் மீண்டும் அவரது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.